Thursday, March 31, 2016

நீ வேண்டும்

நீ வேண்டும்
என் உயிர் வரை வருடிச்சென்ற உன்
ஸ்பரிசம் தொலைத்தவள் நான்
மறுபடி கேட்கிறேன் உன்
மூச்சுக்காற்றில் என் 
கண்கள் மயங்க
நெருங்கி  வா என்று
தூரமெனும் துயரில் சோருகின்ற
மனதில் துடிக்கின்ற உன் நினைவுகள்
போதும் எனை
துடிப்புடன் வாழவைக்க எப்போதும்
இருப்பினும் நீ வேண்டும்


Monday, May 14, 2012




ஏக்கம்

26, MARCH 2012
Views 442
அம்மா என்றழைக்க
எனக்கில்லை மகவு
என்னை நானே வருத்தி அழிக்கிறேன்
தாயை போற்றும் உலகு
தவிக்கும் நம்மை
தரம்குறைவாய் நோக்குவதுமேனோ
சுற்றங்கள் கூடுகின்ற வேளைகளில்
குற்றம் இழைத்ததுபோல்
குனிந்து நிற்கின்றேன்
இது பலருக்குத்தெரியாத வலிகள்
என்  வலிகள் கண்ணீர் துளிகளோடு
எனக்கு மட்டுமே சொந்தமாகின்றன.
ஆளுக்கொரு வடிவில் துன்பங்களை
அளந்து கொடுக்கும் இறைவன் நாளை
ஆளை மாற்றும்போது யாரும் அகப்படலாம்
ஆகவே நம் காயங்களை குத்தி மகிழாதீர்.



காதல் கவிதை

தென்றல்

14, APRIL 2012
Views 291
அந்த தென்றலின் வரவிற்காய்
அன்றொருநாள் - என்
இதயக் கதவுகளை
அகலத் திறந்து வைத்தேன்
உறக்கத்தை தொலைத்து
கற்பனைகளை வாங்கினேன்
பாஷையில்லா மெளனத்தில்
ஆசைகளை வளர்த்தேன்
கனவுகள்கூட கலங்கக் கூடாதென்று
நினைவுகளுக்கு இனிமை கொடுத்தேன்.
திசைமாறி புயலாகி எனை நீங்கி
சென்றது தென்றல்
கற்பனைகளை என்ன செய்வேன்
விற்பனையா செய்ய முடியும்
ஆசைகளை வைத்திருந்து
பூஜையா புரிவேன்
கனவுக்கும் நினைவுக்கும்
கடும் தண்டனையா இடுவேன்
வேதனை தணலாகி எரிய
ஊமையாய் மனம் முடங்க
காலம் கட்டளையிடுகிறது
கடந்துபோக வைக்கிறேன்
மறந்து விடு என்று
நானோ தோண்டியே பார்க்கிறேன்
என்னை உறங்கவிடு
நிஜங்கள் கனவாகிப்போனது வலிக்க
கனவிலும் வந்து உறுத்தாதே
என்னில் நிலைக்க மறுத்த - உன்
தடங்களை அழிக்கவிடு.




காதல் கவிதை

எனை நீ பிரிந்த நாள்

17, APRIL 2012
Views 516
ஓ....அன்று
அந்த நினைவுகள்தான்
எத்தனை கொடியவை ?
என் மனதைக் கேட்கிறேன் - அது
அழுது துடிக்கிறது
ஐம்புலன்களே நீங்கள்
உறங்கிப் போய்விடுங்கள் என்றேன்
மரண தேவதையே - என்னை
வசூலித்துக்கொள் என்றேன்
இதயச் சுவர்களுக்கு எத்தனை வலிமை
இன்னும் வெடிக்காமல் துடிக்கிறது
துன்பங்களை கைது செய்ய நினைத்து
பின் சிரிக்கிறேன்
என்னால் கத்தரிக்கவும் முடியவில்லை
சித்தரிக்கவும் முடியவில்லை
என் பிறந்த நாளை விட - நீ
எனை பிரிந்த நாள் தான்
ஆழமாக என்னுள்ளே
வலிப்பதை நீ அறிவாயா????



புரட்சி கவிதை

போவதெங்கே என் தேசம்

23, APRIL 2012
Views 255
போர் மேகம் புடை சூழ
யுத்தங்கள் பல கடந்தும்
சிக்கல்கள் குறையவில்லை
இரத்த வெள்ளமொடு
பலத்த அழிவு கண்டும்
நிலத்தில் அமைதியில்லை
சுட்டெரிந்து போகும் போது
எங்கிருந்தோ குரல் கொடுத்தேன்
கெட்டழிந்து போகும்போது
சுமையோடு சோர்ந்து போனேன்
பட்டபாடு மறந்துபோக
விட்ட இடம் தொலைத்து நின்றேன்
மரத்துப்போன மனங்களோடு
மறத்தமிழன் வாழ்வுதான்
பயணிக்கும் திசை மாற்ற
வேண்டும் ஒரு மாற்றம் என்று
மீண்டும் மீண்டும் முயல்வோம்.



நட்பெனும் நாடகம்

30, APRIL 2012
Views 210
பொய்யை மட்டுமே பேசும்
உன்னை
உண்மையான நண்பன் என்பதா?
அற்பத்திலும்
குற்றம் காணும் உன்னை
உற்ற நண்பன் என்றுரைக்கவா?
நான் வீழும்போது
மகிழும் உன்னை
தோழன் என்றழைக்கவா?
பொங்கிடும் பொறாமை
உன்னிடம் கண்டபின்
நட்பென்று உன்னை நாடவா?
உன் தேவைகள் முடிக்க
தேனாகப் பேசும் உன் பெயர்
ஆருயிர் நண்பனா?
நீ பெற்ற நன்மைகள்
பெற்றுவிடக் கூடாதென்று
கூடவிருந்து குழிபறிக்கும்
நீ நண்பனா
இல்லை நரியா?
போலி உறவுக்கு
நட்பென்ற வேலியிட்டு
காவல் செய்யும் நான்
நாயா நண்பனா?




மெளனம் விளம்பரம்

06, MAY 2012
Views 125
வெற்றி மொழி
கற்றுக்கொள்ள
கடினமாகத்தான் இருக்கிறது
தற்காப்பு ஆயுதம்
தருணத்தில் மறந்து போவதால் - பின்
வருந்தும் வேளைகள் ஆயிரம்
அர்த்தம்
எதை வேண்டினும் சொருகிக்கொள்ள
விட்டுவைக்கும் இடைவெளி
தொகை
எழுதப்படாமல் கையொப்பமிட்ட
காசோலை
மெளனம்
சில நேரம்  வளர்க்கும் பகை
இருப்பினும் நன்மைகள் ஏராளம்
உபயோகி
இது
இலவசம்.